அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் - பாமக பொதுக்குழுவில் அதிரடி
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
பாமக பொதுக்குழு
பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி ராமதாஸ் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி, இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அதிகாரம், பொதுக்குழுவிற்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும், முக்கிய நிர்வாகிகளை நிர்வகிக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே என 36 தீர்மானங்கள் நிறைவேறற்றப்பட்டது.
16 குற்றச்சாட்டுகள்
மேலும், அன்புமணி ராமதாஸ் மீதான 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாசித்தார்.
1.2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு புத்தான்டு பொதுக்கூட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கி வீசியது, பனையூரில் புதிதாக கட்சி அலுவலகம் தொடங்கி உள்ளேன் அங்கே வந்து என்னை பாருங்கள் என பேசி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
2. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு 100 மாவட்ட செயலாளர்களை வர விடாமல் தடுத்தது.
3. பாமகவின் சமூக ஊடக பிரிவு, ராமதாஸ் உடன் உள்ளவர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புவது.
4. சமரச பேச்சுவார்த்தையை ஏற்காமல் உதாசீனப்படுத்தியது.
5. ராமதாஸ் இருக்கைக்கு அருகே ஒட்டுக்கேட்கும் கருவியை பொருந்தியது.
6. ராமதாஸ் அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டி, அதில் அவருக்கு ஒரு இருக்கை வைத்து, ராமதாஸிற்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என வேண்டியது.
7. ராமதாசிடம் அனுமதி பெறாமல், உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பயணம் மேற்கொண்டது
8. ராமதாசை சந்திக்க வருபவர்களை, ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு அழைத்து செல்வது
9. என்னுடைய பெயர் புகைப்படம் பயன்படுத்தக்கூடாது என கூறியும், எங்கள் குலசாமியே என பேசி வருவது
10. ராமதாஸ் தொடங்கிய பசுமை தாயகம் அமைப்பை கைப்பற்றியது
11. பாமக தலைமை அலுவலகத்தை ராமதாஸுக்கு தெரியாமல் மாற்றியது
12. ராமதாஸிடம் எதுவும் பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் கூறியது
13. மக்கள் தொலைக்காட்சியில் ராமதாஸ் குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் அதை திட்டமிட்டு அபகரித்தது.
14. ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட்டு பிரார்த்தனை செய்வோம் என கேலி செய்தது
15. ராமதாஸ் நீக்கியவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்தது
16. ராமதாஸ் அனுமதி இல்லாமல் பொதுக்குழு கூட்டியது
மேற்கண்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி ராமதாஸ் மீது வைத்த 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, அண்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிடம் பரிந்துரை செய்வதாக பேசினார்.