இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் - பரபரப்பாகும் வாக்குப்பதிவு!
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பாஜக தலைமை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர்.மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என

4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த எம்பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200 ஆகும்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
சட்டப்பேரவை எம்எல்ஏக்களின் மொத்தவாக்கு மதிப்பு 5,43,231 ஆகும். எம்பி, எம்எல்ஏக்களின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,86,431 ஆகும்.குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும்.

கடந்த சில வாரங்களாக திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்ஹாவும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வாக்குகளை சேகரித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் முர்மு பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு எதிர்க்கட்சிகள் தாமாக முன்வந்து ஆதரவு அளித்துள்ளன.
வாக்கு எண்ணிக்கை
சட்டப்பேரவைகளில் இன்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகளுக்கு சீல்வைக்கப்படும். பின்னர் அந்தந்த மாநிலங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்படும்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்றம், பேரவைகளில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை 25-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.