15 வயது சிறுமி கர்ப்பம் - யூடியூப் பார்த்து குழந்தையை பெற்று கொன்ற கொடூரம்!
15 வயது கர்பிணி சிறுமி தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கர்ப்பம்
மகாராஷ்டிரா, நாக்பூரை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, அந்த நபர் மூலம் மாணவி கர்ப்பமடைந்தார். இதனை வீட்டிற்கு தெரியாமல் மறைத்தும் வைத்துள்ளார்.
உடலமைப்பு குறித்து சந்தேகத்துடன் தாய் கேட்கும் போதெல்லாம், வயிற்றில் ஏதோ பிரச்சனை எனக் கூறி சமாளித்து வந்துள்ளார். தொடர்ந்து, யூடியூப் மூலம் பிரசவம் குறித்த ஆலோசனைகளை தேடியுள்ளார். இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அறைக்கதவை பூட்டி தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.
குழந்தை கொலை
பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனே குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, வீட்டில் உள்ள பெட்டி ஒன்றில் சடலத்தை மறைத்து வைத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின் அவரது தாய் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்ததில் மாதவிடாய் எனக் கூறி சமாளித்துள்ளார். இதனை நம்பாத அவரது தாய் தீவிரமாக விசாரித்ததில் அனைத்தையும் தெரிவித்துள்ளார். உடனே சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து கர்ப்பத்திற்கு காரணமான நபரை தேடி வருகின்றனர். மேலும், சிசுவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.