துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலியான பரிதாபம் - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் என்ற இடம் உள்ளது. இங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக எதற்கென்று தெரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், போலீஸ் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது