பிரபல ரவுடி சுட்டுக் கொலை - உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு
முன்னாள் எம்பியும், பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல ரவுடி சுட்டுக் கொலை
குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதற்காக கடந்த மாதம் ஆதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் மூவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள்தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்தது.
இந்நிலையில் ஆதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் முகமதுவும் காவலர்களால் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது மர்மக் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இருவரும் உயிர் இழந்தனர். இதனால் உத்தரப் பிரதேசத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.
இன்று 144 தடை உத்தரவு
இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது.
பொதுமக்களும், அரசியல் கட்சியினர் உள்பட அனைவரும் அனுமதியின்றி வெளியே கூடக் கூடாது என போலீஸார் ஒலிபெருக்கி வாயிலாகவும் ஒவ்வொரு பகுதியாக சென்று பரப்புரை செய்து வருகின்றனர்.
இதுபோல் உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்ட போலீஸாரும் உஷார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.