டெல்லி : அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வெடித்த வன்முறை - 14 பேர் கைது
தலைநகர் டெல்லியில் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. கல்வீச்சுத் தாக்குதலில் காவல்துறையினர் உள்பட பலர் காயமடைந்தனர்.
நேற்று டெல்லி ஜஹாங்கீர் பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அனுமன் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு காவல்துறையினரும் விரைந்து வந்தனர்.
ஆனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் பல போலீஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை தாக்குதலில் அங்கிருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் , வாகனக்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காயமடைந்த அனைவரும் பாபு ஜாக்விஜீவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் அரங்கேறிய வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வெடித்த மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைலாலை சந்திக்கிறார்.