வண்டலூர் பூங்காவில் அரியவகை மரபணுக்கொண்ட வெள்ளைப்புலி உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளைப்புலி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆகான்ஷா என்ற 13 வயதான பெண் வெள்ளைப் புலி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.
இதனால் மருத்துவ பரிசோதனை செய்ததில் அந்த புலி அட்டாக்ஸியா என்ற நரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து கடந்த 2 வாரங்களாக புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்த வெள்ளைப்புலி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டிலேயே உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து அதுக்கு கால்நடைத்துறை மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அரிதினும் அரிதான மரபணுவைக் கொண்ட இந்த வெள்ளைப்புலி வேட்டைக்குத் தனியாகத்தான் செல்லும். நீரில் அதிக நேரம் நீந்தும் தன்மையுடையது.
உலக அளவில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் வெள்ளைப்புலியும் ஒன்று. அதனால் அரசு சிறப்பு கவனம் எடுத்து இந்த அரியவகை புலி இனத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.