மருத்துவமனைக்கே போகாமல் 132 வயது வரை வாழலாம் : நிரூபித்து காட்டிய மூதாட்டி மரணம்
ராமநாதபுரம் அருகே 132 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிப்பங்கு ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குடி கிராமத்தில் சந்தனம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்தார். 1889 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி பிறந்த இவர் வாழ்நாளில் தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்துள்ளார். மிகவும் சுறுசுறுப்பாக வயல் வேலைகள், வீட்டு வேலைகள் செய்து வந்த மூதாட்டி சந்தனம்மாளுக்கு 132 வயது ஆகியுள்ளது.
இவ்வளவு வயதிலும் வாழ்ந்து வந்த சந்தனம்மாளை சுற்றுவட்டார மக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் அறிந்து கொடிப்பங்கு மற்றும் விளாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள், உறவினர்கள் சந்தனம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவர் உயிருடன் இருக்கும் பொழுது எந்த மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற்றதில்லை என்றும், வேலாங்குடி கிராமத்தைச் சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராம பகுதியில் 132 ஆண்டுகள் வாழ்ந்த முதல் மூதாட்டி இவர் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.