கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கி உயிரிழந்த சிறுமி..!
கோவில் திருவிழாவின் போது ஊர்வலம் சென்ற சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவிழாவின் போது சோகம்
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கள் கிராமத்தில் கடந்த 14ம் தேதி அங்காளம்மன் கோவில் கடைசி நாள் விழா நடைபெற்றது.
அப்போது மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.
சுவாமி ஊர்வலத்தின் பின்னே சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் லாவண்யா என்ற 13 வயது சிறுமி மாட்டு வண்டியின் பின்னே ஏரி அமர முயற்சித்த போது அங்கிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கியது.
பரிதாபமாக உயிரிழப்பு
அப்போது லாவண்யா முடியோடு சேர்த்து இழுக்கப்பட்ட போது படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் சிறுமியை துாக்கி கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெனரேட்டர் வாடகை விடும் உரிமையாளர் முனுசாமி என்பவரை கைது செய்தனர்.
திருவிழாவின் போது ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.