ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி 13 வயது சிறுவனை கொலை செய்த குற்றவாளி வெட்டி படுகொலை - பழிக்குப் பழி
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைமணியின் மகன் அபினேஷ்.
கடந்த 2020ம் ஆண்டு அபினேஷ், 13 வயது சிறுவன் தேவன்ராஜ் என்பவனை ஓரினச்சேர்க்கை செய்ய கட்டாயப்படுத்தி கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் அபினேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவன்ராஜை தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த ரீனேஷ் என்ற சிறுவனையும் ஓரின சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அபினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த அபினேஷ், கோட்டகுப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.