சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள் சுட்டுக்கொலை - ரஷ்ய ராணுவம் அட்டூழியம்
உக்ரைனில் சரணடைய மறுத்ததால் ரஷ்ய படையினரால் 13 உக்ரைன் வீரர்களின் உயிர்தியாகம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கருங்கடலில் 40 ஏக்கர் பரப்பளவை கொண்ட சிறிய பாம்புத் தீவை ரஷ்ய போர்க் கப்பல் முற்றுகையிட்டது. அப்போது அங்கு உயிர் சேதத்தை தவிர்க்க ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுமாறு உக்ரைன் வீரர்களை ரஷ்ய போர் கப்பல் கேப்டன் கேட்டுக்கொண்டார்.
போரிட்டாலும் தீவை காக்க முடியாது என உக்ரைன் வீரர்களுக்கு தெரிந்திருந்தும் கடைசி வரை சரணடைய மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் பாம்பு தீவை ரஷ்ய போர் கப்பல் கேப்டன் பீரங்கி குண்டுகளால் தாக்கியதில் 13 உக்ரைன் வீரர்கள் இன்னுயிரை நீத்தனர். அவர்கள் தியாகத்தை போற்றி Hero of Ukraine பதக்கம் வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.