கொரோனா நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு அரசு அமல்படுத்திய முழு ஊரடங்கால் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை முழுவதுமாக கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு பணிக்காக அதிக அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ள நிலையில், கொரோனா பரவலை ஆய்வு செய்து தேவையான யோசனைகளை தமிழக அரசிற்கு வழங்குவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
13 பேர் கொண்ட இந்த குழுவில் அரசு அலுவலர்கள் அல்லாத 4 பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட ஒன்பது பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.