சம்பளத்தை இழக்கும் 13 லட்சம் அரசு ஊழியர்கள்? முதல்வர் அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
சொத்து விவரங்கள்
உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது.
அரசு ஊழியர்கள் தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அரசின் இணையதளமான மனவ் சம்பதாவில் (Manav Sampada) முறையாக அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை உத்தர பிரதேச மாநில அரசு பிறப்பித்தது.
13 லட்சம் ஊழியர்கள்
ஆனால் பெரும்பாலானவர்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாத நிலையில், இக்காலக்கெடு கடந்த ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் 17.88 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் தற்போது வரை வெறும் 26 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை அறிவித்து உள்ளனர்.
இன்னும் 13 லட்சம் ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தெரிவிக்காதவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாது என மாநில தலைமை செயலாளர் மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்தோஷ் வர்மா அளித்துள்ள பேட்டியில், மாநில அரசு இத்திட்டத்தை 2017-ம் ஆண்டே ஏன் கொண்டு வரவில்லை. தங்களது அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் இத்திட்டத்தை மாநில அரசால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.