கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி
கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விழாவிற்கு பின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "சமீபத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணி செய்து முடிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி உள்ளது. இந்தியா வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் மகள்கள் நமது நாட்டுக்கு தலைமை வகிப்பார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கரோனா காலத்தில்கூட ஒருவரும் பட்டினியால் பாதிக்கப்படவில்லை என்ற நிலையை உருவாக்கினோம்.சவால்கள் நிறைந்த உலகில், இந்தியாவின் குரல் வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் திறனை உலகம் இன்று ஒப்புக்கொள்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் அரசு அயராது உழைத்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டில் இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகி இருக்கும். அதை நோக்கியே பணியாற்றி வருகிறோம்" என்றார் மேலும், “இன்று நமது தேசியக் கொடி பார்க்கும் இடமெல்லாம் உயரமாக பறந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டி உள்ளோம்.
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சி செய்து சாதனை படைத்துள்ளோம். உலகில் எந்த நாடும் செல்லாத இடத்திற்கு நமது சந்திரயான் 3 விண்கலம் சென்று தரையிறங்கியது.
விண்வெளியில் மட்டுமின்றி விளையாட்டிலும் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டு வியந்து வருகிறது. விளையாட்டுத் துறையிலும் இந்தியாவின் திறனை உலகம் இன்று வியந்து பார்க்கிறது. சமீபத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றதில் இந்தியா கடந்த கால சாதனைகளை முறியடித்தது” என்று பிரதமர் மோடி பேசினார்.