12-ம் வகுப்பு அலகு தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வுக்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதில், வாட்ஸ் அப்-ல் மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும் என்றும், மாணவர்கள் வினாத்தாளை பார்த்து அதற்குரிய விடைகளை தனி தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, பின் அதை படம் பிடித்தி PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.