பேருந்து நிற்காமல் சென்றதால் தவறி விழுந்த பள்ளி மாணவி ; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஓசூர் அருகே அரசு பேருந்தில் இருந்து இறங்கும் போது பள்ளி மாணவி தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி, கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பும் போது தருமபுரி செல்லும் அரசு பேருந்தில் சென்றார். அவர் இறங்கும் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவி பதற்றமடைந்து பேருந்து மெதுவாக செல்லும் போது இறங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்தார்.
அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து கவனக்குறைவு, அலட்சியமாக பேருந்தை இயக்கியது, விபத்து ஏற்படுத்தியது ஆகிய 3 பிரிவின் கீழ் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நடத்துனர் குமாரை கைது செய்தனர்.