12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து சில மாநிலங்களும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தன.
இதனால் தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், நாளை இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உரிய முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.