இப்படித்தான் பிளஸ்-2 மதிப்பெண் வெளியாகும் : தமிழக அரசு விளக்கம்

Tn government 12th mark valuation
By Petchi Avudaiappan Jun 26, 2021 01:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவது எப்படி என அரசு விளக்கம் அளித்துள்ளது. 


கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. மேலும் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை கணக்கிட குழுவும் அமைக்கப்பட்டது.


மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாணவர் ஒருவர் 10-ஆம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அம்மாணவர் 11ஆம் வகுப்பில் எழுத்து முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 20% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

12-ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வுக்கு 20, அக மதிப்பீடுக்கு 10 என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் 10 அக மதிப்பீடு மதிப்பெண்கள் 30க்கு மாற்றப்பட்டு கணக்கில் கொள்ளப்படும்.

கொரோனாவால் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்றிராத பட்சத்தில் அவர்களின் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் மாணவர் பங்கேற்றிராத பட்சத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அடிப்படையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும்.

11,12-ஆம் வகுப்பு தேர்வுகள் எதிலும் பங்கேற்றிராத மாணவர்கள் தனித்தேர்வர்களாக மீண்டும் தேர்வெழுத வாய்ப்புத் தரப்படும். மேற்கண்ட வழிமுறைப்படி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.

இம்முறையில் மதிப்பெண்கள் குறைவாக வந்துள்ளது என கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்ணே இறுதியானதாக அறிவிக்கப்படும். தனித் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.