இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு வெயில் உச்சம் - இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
தமிழகத்தில் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெயில் கோரத்தாண்டவத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசுகிறது.இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.
வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக வெயில் அடிக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது என்றும், சராசரி கோடை வெயில் அளவை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.