பிரேக்கில் வந்த தீப்பொறி..ரயிலில் இருந்து குதித்த பயணிகள் - உடல் துண்டாகி 12 பேர் பலி!
கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அப்போது ரயிலில் தீப்பிடித்து விட்டதாக யாரோ தவறான தகவலைத் தெரிவித்துள்ளனர்.இதனால் அச்சமடைந்த பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.அதன் பிறகு பெட்டிகளிலிருந்த பயணிகள் அலறிக் கொண்டு கீழே இறங்கி அருகிலிருந்த தண்டவாளம் வழியாக ஓடினர்.
அந்த நேரத்தில் அந்த தண்டவாளத்தில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து பயணிகள் மீது மோதியது.இதில் 12 பேர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில்
இந்த சம்பவத்தை அறிந்த ரயில்வே காவல் துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் . முதற்கட்ட விசாரணையில் அபாய சங்கிலி ஒலித்ததால் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது.
அப்போது பிரேக்கில் உராய்வு ஏற்பட்டு தண்டவாளத்தில் தீப்பொறி பறந்துள்ளது.இந்த தீப்பொறியைப் பார்த்து பொதுப் பெட்டியிலிருந்த பயணிகள் பெரும்பாலானோர் கீழே குதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.