11 ஆம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து படுகொலை - திருப்பூரில் பயங்கரம்
திருப்பூரில் 11 ஆம் வகுப்பு மாணவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சண்முகராஜ் என்பவர் தனியார் கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கற்பகவள்ளி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினரின்ஒரே மகள் ஹர்த்திகா ராஜ் உடுமலை- பொள்ளாச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் காலை ஹர்த்திகாராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது வீட்டு சாவி தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரிடம் தனித்தனியாக உள்ளது. அன்றைய தினம் மாலையில் வேலைக்கு சென்றிருந்த கற்பகவள்ளி 6.40 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் சமையலறை பகுதியில் ஹர்த்திகாராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்த நிலையில் சமையலறையில் பயன்படுத்தும் மரப்பிடி போட்ட கத்தி, ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது. இதைக் கண்டதும் கற்பகவள்ளி அதிர்ச்சி அடைந்து அலறினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹர்த்திகா ராஜ் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
வீட்டில் தனியாக இருந்த மாணவியை கொன்ற கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.