‘’பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான்'’ - தொடரும் பாலியல் வன்முறைகள் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

suside mangadu 11thcalassstudent
By Irumporai Dec 18, 2021 02:54 PM GMT
Report

சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ள மாணவி,தற்கொலை கடிதம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாங்காடு சக்தி நகரை சேர்ந்த மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார்.

அவரது தாய் மற்றும் மகள் மட்டும் வீட்டில் இருந்தனர். தாய் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

கதவை தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த சில தினங்களாக மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.