காளைமாடு முட்டி 10ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு..!
ஓசூர் அருகேயுள்ள சப்படி கிராமத்தில் இன்று கோயில் திருவிழாவையொட்டி எருதாட்ட விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து செல்லப்பட்டு வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
இந்த நிலையில் சப்படி கிராமத்தை அடுத்துள்ள கானலட்டி கிராமத்தை சேர்ந்த செம்பப்பா - ரேணுகா தம்பதியரின் மகன் திவாகர் சப்படி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்ட விழாவிற்கு எருதாட்டத்தை காண சென்றுள்ளார்.
திவாகர் அட்டகுறுக்கி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவர் தனது நண்பர்களோடு பள்ளியிலிருந்து வெளியேறி சப்படி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்டம் விழாவை காண சென்றுள்ளார் எனக்கூறப்படுகிறது.
எருதாட்ட விழாவின்போது சீறிப்பாய்ந்து வந்த காளைமாடு ஒன்று மாணவன் திவாகரை முட்டி தள்ளி தூக்கி வீசியுள்ளது இதில் பலத்த காயமடைந்த அவனை அங்கு நின்றவர்கள் தூக்கி ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவன் திவாகர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
பின்னர் அவனது உடல் அவனது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளி மாணவனின் உடலை பார்த்து அவனது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண் கலங்கச் செய்தது.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.