10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வெளியானது திருப்புதல் தேர்வு அட்டவணை...!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேல் மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில், திருப்புதல் தேர்வுக்கான கேள்விகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.