சர்ச்சையில் சிக்கிய 10 ரூபாய் கூல் ட்ரிங்ஸ்: அதிரடியில் இறங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை லக்ஷ்மன் சாய், ஓமேஷ்வர் என்ற சிறுவர்கள் வீட்டின் அருகே உள்ள கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளனர்.
உடனே மயக்கம் வருவதாக கூறியதை அடுத்து பெற்றோர் கெமிக்கல் வாசனை வரவே கீழே துப்பி வாந்தி எடுக்க வைத்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது தொடர்ந்து ரத்த வாந்தி எடுக்கவே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் குளிர்பானத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு குளிர்பானத்தின் தரத்தை சோதனைக்கு உட்படுத்தினர். இதனைத் தொடர்ந்து புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த கடையை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடையில் உள்ள பொருட்களில் என்னென்ன தரமற்றவை என்பது தொடர்பாக அனைத்தையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள தொழிற்சாலை மற்றும் திருவள்ளூரில் அலமாதியில் இருக்கக்கூடிய குடோனிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
10 ரூபாய்க்கு குளிர்பான பாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது. முறையாக உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெறாமல் விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். சென்னை முழுவதும் அனைத்து கடைகளிலும் அங்கீகாரம் இல்லாத தரமற்ற பாட்டில்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இதுபோன்று ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே சிறுமி ஒருவர் இதே போன்ற குளிர்பானம் குடித்து உயிர் இழந்த நிலையில் தற்பொழுது மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.