இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டாலும் 10 நாள் கட்டாய தனிமை: மத்திய அரசு
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணிகளை அனுமதிப்பதற்கான விதிமுறைகளை இங்கிலாந்து அரசு சமீபத்தில் அறிவித்தது. அதில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருந்தாலும் இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசிசெலுத்தி கொண்ட இந்தியர்கள் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்ததால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை அனைத்தும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி இங்கிலாந்தில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் தேவை.
இந்தியா வந்ததும் விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இந்தியா வந்த பிறகு 8 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் எந்த தடுப்பூசியை போட்டவர்களாக இருந்தாலும், இந்தியாவுக்கு வந்த பிறகு 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்து அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.