மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவாக 108 வீணைகள் இசைத்து வழிபாடு
உலகப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழாவில் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு 108 வீணைகள் இசைக்கும் சிறப்பு இசை வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 2026 ஆம் ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 11ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கக்கூடிய கொலு மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் மீனாட்சி அம்மன் தினமும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அப்படியாக, நவராத்திரி விழாவில் முதல் நாளான அக்டோபர் 11ஆம் தேதி ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்திலும், இரண்டாம் நாளான 12 ஆம் தேதி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோளத்திலும், மூன்றாம் நாளான பதிமூன்றாம் தேதி கோலாட்ட அலங்காரத்திலும், நான்காம் நாளான 14-ஆம் தேதி பட்டாபிஷேக திருக்கோலத்திலும், ஐந்தாம் நாளான 15 ஆம் தேதி தபசு திருக்கோலத்திலும், ஆறாம் நாளான 16ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்திலும், ஏழாம் நாளான 17ஆம் தேதி முத்தங்கி அலங்காரத்திலும், எட்டாம் நாளான 18 ஆம் தேதி மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், ஒன்பதாம் நாளான 19ஆம் தேதி சிவாபூஜை செய்யும் திருக்கோலத்திலும் அன்னை மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் பத்தாம் நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நவராத்திரி விழா நாளில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள், திருமுறை, இன்னிசை, பக்தி இசை பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் நவராத்திரி உற்சவத்தில் நிறைவு விழாவான விஜயதசமியை முன்னிட்டு 108 வீணைகள் இசைக்கும் சிறப்பு இசை வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இசை கலைஞர்கள் பங்கேற்று பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்கு வழிபாடு நடத்தினர்.
மேலும், மாணவ மாணவியர்களின் கலை, கல்வி மற்றும் இசையில் சிறந்து விளங்க வேண்டி நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வீணை இசையின் மூலம் இறைவழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு இந்திய பாரம்பரிய இசையும் சிறப்பையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்தது.
இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு கொலு பொம்மைகளை காணவும் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்த அன்னை மீனாட்சி தரிசனம் செய்யவும் வருகை தந்தனர்.
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil