கடந்த ஓராண்டில் மட்டும் 102 டன் போதைப்பொருள் பறிமுதல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“கடந்த 2021-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை 799.8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்து காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே குட்கா இருக்கக் கூடாது என்பதற்காக பேரவையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு குட்கா விற்றதால் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.” என தெரிவித்தார்.