56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ஒரு 100ரூபாய் நோட்டு - அப்படி என்ன ஸ்பெஷல்?
100 ரூபாய் நோட்டு ஒன்று 56 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
ரூ.100 ஏலம்
சில அரிய பொருட்கள் எதிர்பாராத விலைக்கு ஏலம் சென்று காண்போரை வியப்பில் ஆழ்த்தும். அதே போல் 100 ரூபாய் நோட்டு எதிர்பாராத விலைக்கு ஏலம் சென்றுள்ளது.
லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு ஒன்று 56,49,650 ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
ஹஜ் நோட்டுகள்
HA 078400 என்ற வரிசை எண் கொண்ட இந்த 100 ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி 1950 ஆம் ஆண்டு வெளியிட்டது. இது 'ஹஜ் நோட்டுகள்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரூபாய் நோட்டு 'HA' வரிசை எண் உடன் வெளியிடப்பட்டது. ஹஜ் யாத்திரைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் யாத்ரீகர்கள், வழக்கமான இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுப்ப நோக்கமாக கொண்டு ரிசர்வ் வங்கி இந்த சிறப்பு கரன்சியை வெளியிட்டது.
பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் போன்று இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ளும் வளைகுடா நாடுகளில் இந்த நாணயம் சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது. வளைகுடா நாடுகள் சொந்த நாணயத்தை வெளியிட துவங்கிய பின்னர் 1970 ல் ஹஜ் கரன்சிகள் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
கடலுக்கு அடியில்
இன்று நாணய சேகரிப்பாளர்களிடையே இந்த நாணயங்கள் மதிப்பு மிக்கதாக மாறியுள்ளது. லண்டனில் நடந்த மற்றொரு ஏலத்தில் இது போல் இரு 10 ரூபாய் நோட்டுகள் பெரும் தொகைக்கு ஏலம் சென்றது.
ரூ.6.90 லட்சத்துக்கு ஒரு நோட்டும், ரூ.5.80 லட்சத்துக்கு மற்றொறு நோட்டும் ஏலம் போனது. முதல் உலகப்போரின் போது வெளியிட்டபட்ட இந்த நோட்டுகள் 1918 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஜெர்மன் டார்பிடோக்களால் மூழ்கடிக்கப்பட்ட 'எஸ்எஸ் ஷிராலா' கப்பலில் இருந்துள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் தொலையாமல் இருக்க, இறுக்கமான மூட்டைகளுக்குள் வைக்கப்பட்டதால் இந்த நோட்டுகள் கடல் நீரில் படாதவாறு இருந்தன. நூறாண்டுகள் கடந்தும் இந்த நோட்டுகள் கடலுக்கு அடியில் இருந்துள்ளதால் இதன் மதிப்பு அதிகரித்துள்ளது.