புதிய ரூ.1,000 நோட்டு வெளியாகிறதா? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் புதிய ரூ.1000 நோட்டுகள் வெளியிடப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
1000 ரூபாய் நோட்டு
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டன.
தற்போது இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

இந்த சூழலில் 1,000 ரூபாய் நோட்டுகளை புதுவடிவில் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதில், அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அந்த ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் கோபுரம் இடம்பெற்ற மஞ்சள் நிற ரூ.1000 நோட்டின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த தகவல் பொய்யானது என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய ரூ.1000 நோட்டுகளை வெளியிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எனவே, அரசு வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.