கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - ஜூலை 15-ம் தேதி முதல் அமல்!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடத்தில் உள்ளது.
மேலும், மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும்,
மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் வரும் கல்யாண்டு முதல் செயல்பாட்டு வரும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 3 லட்ச மாணவிகள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.