பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
நிலை குலைந்த பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஜுலை-14 முதல் கன மழை பெய்து வருவதால் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த ஞாயிற்று கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை பெய்து வருவதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.1527 பேர் காயமடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கினால் 3,451 கி.மீ சாலைகள், 147 பாலங்கள், 170 கடைகள் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வா இருவரும் பலுாசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மறுகுடியமர்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக உறுதியளித்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 16 கோடி டாலரும், பிரிட்டன் 15 லட்சம் பவுண்டுகளும் வழங்க முடிவு செய்துள்ளன.
அமீரகத்தின் நிவாரண உதவியில் 3000 டன் உணவுப் பொருள்கள் மருத்துவ பொருள்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களும் வழங்க உள்ளது.