ஊர் முழுவதும் இனி 100 உணவு தெருக்கள் - மாநில அரசுகளுக்கு ஆர்டர் போட்ட மத்திய அரசு!
நாடு முழுவதும் 100 உணவு தெருக்களை தொடங்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உணவு தெருக்கள்
மத்திய சுகாதார அமைச்சகமும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமும் இணைந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளன. அதில், நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு சுகாதாரமான உணவுப்பொருட்கள் சுலபமாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

எனவே, நாடு முழுவதும் சோதனை முறையில் 100 மாவட்டங்களில் 100 உணவு தெருக்களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் இதை படிப்படியாக பிற பகுதிகளுக்கும் அதிகரிக்கலாம். மக்கள் மத்தியில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
அரசுக்கு வேண்டுகோள்
இதனால் உணவுப்பொருள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்த திட்டம் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கும். தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) வழங்கும். இதற்கான நிதியுதவியாக ஒரு உணவு தெருவுக்கு ரூ.1 கோடி வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.