ரூ.100 கோடியில் கழுதை பால் மோசடி - சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த சம்பவம்
கழுதை வளர்ப்பு என்ற பெயரில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஈமு கோழி வளர்ப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சதுரங்கவேட்டை என்ற படத்தில் இது போல் நடக்கும் பல்வேறு மோசடிகளை காட்டியிருப்பார்கள்.
தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த குழு ஒன்று இதே போல் கழுதை வளர்ப்பு என்ற பெயரில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக விவசாயிகளை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
கழுதை வளர்ப்பு
கழுதை பாலுக்கு சந்தையில் நல்ல டிமாண்ட் இருப்பதாக கூறியுள்ள மோசடியாளர்கள், 1 லிட்டர் கழுதை பாலை ரூ.1500 க்கு வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி விண்ணப்பித்தவர்களுக்கு கழுதை வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர்.
கழுதையை பராமரிக்க கொட்டகை அமைத்து தருகிறோம், கழுதை நோய் வாய்பட்டால் அதற்கான சிகிச்சையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதில் உறுப்பினர் கட்டணம் என பலரிடமும் ரூ.25 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். மேலும் கழுத்தை பாலை வீட்டில் சேமிக்கும் எந்திரம் உள்ளது என கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.75,000 வரை பணம் வசூல் செய்துள்ளனர்.
100 கோடி மோசடி
ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு பணம் வழங்கி வந்த நிறுவனம், கடந்த 18 மாதங்களாக பணம் வழங்கவில்லை. அவர்கள் வழங்கிய காசோலையை வங்கியில் கொடுத்த போது அவை பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பணம் கட்டியவர்கள் உணர்ந்துள்ளனர். இதே போல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.