10 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை - தேனியில் அரங்கேறிய கொடூரம்
தேனியில் 10 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் காஞ்சிமரத்துறை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றதாக குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிறுமியின் தந்தை வழி உறவினர் விஜய் என்ற 24 வயது இளைஞருக்கு வீட்டிலேயே வைத்து திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. மேலும் தற்போது சிறுமி திருமணம் செய்தவரின் பாட்டி வீட்டில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியம்மாள் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியின் தந்தை முருகன் மற்றும் திருமணம் செய்த விஜய் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்,சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்ததாக உறவினர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சிறுமிக்கு ஆலோசனை வழங்கினர்.