விருது தொகை 10 லட்சத்தை கொரோனா நிதிக்கு வச்சுக்கோங்க : தோழர் சங்கரய்யா அறிவிப்பு!
தகைசால் தமிழர் விருது தொகை ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்
.ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும்.
இந்த நிலையில் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்த தகைசால் தமிழர்' விருது முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தலைவர் என்.சங்கரய்ய வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன்.
சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன்.
எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.