தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி - தஞ்சாவூர் அருகே சோக சம்பவம்
தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகேயுள்ள மேற்கே பூதலூர் ரோட்டில் 5 கி.மீ. தூரத்தில் மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. அங்கு அப்பருக்கு சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் குருபூஜை விழா எடுக்கப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பக்தர்கள் புடைசூழ வீதியுலா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 94வது ஆண்டு அப்பர் குருபூஜைக்கான சித்திரை தேர்த் திருவிழா நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. அதிகாலை வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிலையில் தேர் களிமேடு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேரை திருப்ப முயற்சித்த போது அதன் மேற்பகுதி அங்கிருந்த உயரழுத்த மின்கம்பியில் உரசி எரிந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் தேரோட்டம் பார்க்க வரும் பக்தர்கள் வெறும் காலோடு வருவார்கள் என்பதால் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்களில் சிலர் தண்ணீரில் இருந்து தள்ளி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.