“இதுக்கு வழி கண்டு பிடிச்சீங்கனா 1 மில்லியன் டாலர் தரோம்” - நாசா அறிவிப்பு
விண்வெளி வீரர்களின் உணவுகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வருவோருக்கு சுமார் 7.4 கோடி ரூபாயை (1 மில்லியன் டாலர்) நாசா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பலருக்கு ஆவலை தூண்டி உள்ளது. இதை 'Deep Space Food Challenge' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு சத்தான, புதுமையான நீண்ட நாள் கெடாத உணவுகளை வழங்க வேண்டும். இதற்காக சிறந்த தொழிற்நுட்பங்களை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு இந்த பணம் வழங்கப்படும்.
இது குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகியும் வருகிறது. இது குறித்து நாசா உணவு துறையின் தலைமை அதிகாரியான ஜிம் ராய்ட்டரிடம் கேட்டபோது,
"விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகளை தயாரிப்பதில் பல சவால்கள் உள்ளன. குறிப்பாக அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதில் அதிக சவால்கள் இருக்கிறது.
எனவே இவை அனைத்தையும் தாண்டி ஊட்டச்சத்துக்கள் நிறைத்த உணவுகளை விண்வெளி வீரர்கள் சாப்பிடும் வகையில் சிறந்த தொழிற்நுட்ப முறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இது எங்களின் நீண்ட கால ஆய்வாக உள்ளது.
தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் விண்வெளி வீரர்கள் சாப்பிட்டு வருகின்றனர். எனினும் இதில் அணைத்து வகையான சத்துக்களும் கிடைப்பதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
What's cookin'? Seriously, we want to know.
— NASA (@NASA) January 20, 2022
Phase 2 of the Deep Space Food Challenge offers up to $1 million to teams who demonstrate food production technology for future long-term space missions, potentially benefitting people on Earth. Ready? Sign up: https://t.co/SYr3lbqkVq pic.twitter.com/zIBnnuAdKp
இதே போன்ற போட்டி ஒன்று கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. அப்போது சுமார் 18 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு 450,000 டாலர்கள் வழங்கப்பட்டது.
அவர்களின் சிறந்த படைப்புகளுக்காக இது வழங்கப்பட்டது. இதில் தரமான, பாதுகாப்பான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுமுறை கொண்ட புரடக்டகளை உணவு துறையின் மூலம் இவர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர்.
இந்த புதுமைகளை அங்கீகரிக்கும் வண்ணம் இவர்களுக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டது. தற்போது நடக்கவுள்ள இரண்டாம் கட்ட போட்டியில் 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது என்று நாசா அறிவிப்பு தந்துள்ளது.
மேற்சொன்ன சவால்களை சமாளித்து, சிறந்த தரமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு முறையை அறிமுகப்படுத்தும் நபர்களுக்கு இந்த தொகை கிடைக்கலாம். இதை யாரெல்லாம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.