உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ₹1 லட்சம் பணம் திருட்டு - அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்

dmk udhayanidhistalin உதயநிதி ஸ்டாலின்
By Petchi Avudaiappan Jan 12, 2022 10:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கட்சி நிகழ்ச்சியில் ஒரு லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்பி கலாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி வந்தனர்.

அப்போது நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக சேப்பாக்கம் தொகுதி வட்டசெயலாளரான வெங்கடேசன் ரூ.1 லட்சத்தை பாக்கெட்டில் வைத்திருந்தார். கூட்ட நெரிசலில் திடீரென பாக்கெட்டில் இருந்த ரூபாய் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெங்கடேசன் அருகிலேயே நீண்ட நேரமாக நின்று நோட்டமிட்டு, உதயநிதி ஸ்டாலின் புறப்படும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த 1 லட்ச ரூபாயை பறித்து செல்வது போன்று காட்சியில் பதிவாகி உள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.