நான் 1 கோடி ரூபாய் கேட்டது உண்மை தான் : கே.பி.முனுசாமி புதிய விளக்கம்
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் நேற்று வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
ஆடியோ விவகாரம்
கே.பி.முனுசாமிக்கு எதிரான ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முதலில் 50 ரெடி செய்துவிட்டேன், மீது 50 மாலைக்குள் ரெடியாகிவிடும் என்று கே.பி.முனுசாமியிடம் கூறுகிறார். அதற்கு கே.பி.முனுசாமி, பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகனை அனுப்புவதாக கூறுகிறார். இந்த ஆடியோ அதிமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தொண்டர்களுக்கு கே.பி.முனுசாமி பற்றி தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆடியோவை வெளியிட்டேன். இதற்கு அவர் பதில்தராவிட்டால் வீடியோவையும் வெளியிடுவேன் என்றார். இந்நிலையில் இந்த ஆடியோ குறித்து கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கடனாக கேட்டேன்
அதில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் 1 கோடி ரூபாய் பணம் கேட்டது உண்மைதான். ஆனால் எதற்காக கேட்டேன் என்றால், 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் அனைவருக்கும் பணம் கொடுத்தார்கள்.
ஆனால் எனக்கு மட்டும் பணம் கொடுக்கவே இல்லை. எனவே தேர்தல் செலவுக்காக எனக்கு தெரிந்தவர்களிடம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டேன். அது போலத்தான் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். கடனாக நான் கேட்ட பணத்தை கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்டதாக கூறுவது கேவலம்.
கடனாக கேட்ட பணத்தை மனசாட்சியே இல்லாமல் இப்போது வெளியிடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. அது நான் பேசிய ஆடியோதான், நான் மறுக்கவில்லை என்றார் கே.பி.முனுசாமி.