ஈரோடு இடைத்தேர்தல்; தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றினால் ஒரு கோடி பரிசு - சுவரொட்டியால் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நேர்மையாக பணியாற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப் போவதாக கரூரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் - குவியும் பரிசுப் பொருட்கள்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பணமும், பரிசுப் பொருட்களும் புகுந்து விளையாடுகின்றன. ஒவ்வொரு வாக்காளருக்கும் சுமார் 50,000 மதிப்புள்ள பொருட்களும், பணமும் அரசியல் கட்சிகளால் வாரி வழங்கப்பட்டுள்ளன.
அதை கண்காணித்து தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ அங்கு பெயரளவுக்கு மட்டுமே சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. கண்காணிப்பை மேற்கொண்டிருக்கிறது.
சுவரொட்டியால் பரபரப்பு
அதன் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் அங்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்தி அவற்றை தருபவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்து கரூரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சு. ராஜேஷ் கண்ணன் என்பவர் பெயரால் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கி, பாராட்டு விழா நடத்தப்படும்.
அதற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று பிப்ரவரி 25-ம் தேதி கடைசி நாள் என்றும் விழா நடைபெறும் நாளாக 27-ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான சுவரொட்டியால் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.